மாநில செய்திகள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது + "||" + Local body nominations for 9 districts including Kanchipuram and Chengalpattu begin today

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
சென்னை,

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடக்கிறது.

இதுதவிர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக்டோபர் 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஊராட்சி செயலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

அலுவலக நாட்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வருகிற 22-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் 23-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை திரும்பப்பெற 25-ந் தேதி கடைசி நாளாகும்.

வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும்போது வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களையோ, உறுதிமொழிகளையோ அளிக்கக்கூடாது. ஒருவர் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினர் அல்லது தலைவராக போட்டியிட விரும்புகிறாரோ, அந்த ஊராட்சி வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய வார்டுக்கு போட்டியிடுவோர் பெயர், தொடர்புடைய ஒன்றிய வாக்காளர் பட்டியலிலும், மாவட்ட ஊராட்சி வார்டுக்கு போட்டியிடுவோர் பெயர், தொடர்புடைய மாவட்ட வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம் மற்றும் குற்றவியல் விவரங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வேட்பு மனுவுடன் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் ஆணை உறுதி ஆவணம் (அபிடெவிட்) வேட்பாளர்களால் படிவம் 3-ஏ-ல் தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் பிரகடன அறிக்கை அளித்தால் போதுமானது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு திரும்பப்பெறும் நாளன்று பகல் 3 மணிக்கு முன்னதாக வழங்க வேண்டும். காலம் கடந்து படிவங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளராக மட்டும் கருதப்படுவார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளன்று அவர் 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.200, ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தலா ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1,000 வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மேற்கூறிய தொகையில் 50 சதவீதம் செலுத்த வேண்டும்.

பிரசாரத்தின்போது வேட்பாளர்கள் அரசு பிறப்பித்துள்ள கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவறும் வேட்பாளர்கள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள் புகார் தெரிவித்தால் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவல்களை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.