கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வெளிநாட்டு கும்பல் சிக்கியது


கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வெளிநாட்டு கும்பல் சிக்கியது
x
தினத்தந்தி 14 Sep 2021 6:17 PM GMT (Updated: 14 Sep 2021 6:17 PM GMT)

சட்ட விரோதமாக தங்கி இருந்ததுடன் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வெளிநாட்டினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த புதுவையை சேர்ந்தவரும் சிக்கினார்.

புதுச்சேரி
சட்ட விரோதமாக தங்கி இருந்ததுடன் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வெளிநாட்டினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த புதுவையை சேர்ந்தவரும் சிக்கினார்.

கஞ்சா விற்பனை

புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் வாழைக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சிறப்பு அதிரப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு வீட்டில் 3 பெண்களும், 3 ஆண்களும் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியா வந்த அவர்கள் சட்ட விரோதமாக விசா இன்றி புதுச்சேரியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. 

7 பேர் கைது

இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 6 பேரிடமும் விசாரித்தனர். 
இதில்,  கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிலருக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களுக்கு வாழைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார்.
கைதான 7 பேரையும் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story