தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதியை சமூகநீதி நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு


தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதியை சமூகநீதி நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 14 Sep 2021 7:12 PM GMT (Updated: 14 Sep 2021 7:12 PM GMT)

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதியை சமூகநீதி நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதியை ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாடுவது என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக 6-ந் தேதியன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட வேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.

அந்த உறுதிமொழி என்னவென்றால்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன்;

சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவு கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்;

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்;

மானுடப்பற்றும், மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்; சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்’’ என்பதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story