6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வி துறை சார்பில் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு


6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வி துறை சார்பில் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 9:02 PM GMT (Updated: 14 Sep 2021 9:02 PM GMT)

6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வி துறை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

சென்னை,

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அந்தவகையில், பள்ளிக்கல்வி துறையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதில் பள்ளிக்கல்வி துறை சார்ந்த அனைத்து முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும் பேசப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிகள் திறக்கப்பட்டு 14 நாட்கள் ஆன நிலையில் குமரி மாவட்டத்தில் (87 சதவீதம்) உள்ள பள்ளிகளில் மாணவர்கள் வருகை எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறைந்தபட்சம் என்று பார்த்தால், கோவை மாவட்டத்தில் (67 சதவீதம்) இருக்கிறது. இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் வருகை அங்கு செய்யப்படும் விழிப்புணர்வை பொறுத்து வித்தியாசப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் பல்வேறு கருத்துகளை கேட்டிருக்கிறோம். இதனைத்தொடர்ந்து அடுத்து 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை ஆரம்பிக்கலாமா? அல்லது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து கருத்துகள் கேட்டோம். அவரவர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

கேரளாவை ஒட்டியிருக்கும் குமரி, தேனி, கோவை மாவட்டங்களில் சூழ்நிலை, எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்றெல்லாம் பேசினோம். இன்று (புதன்கிழமை) முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த முழு அறிக்கையை கொடுக்க இருக்கிறோம்.

முதல்-அமைச்சர் ஊரடங்கில் தளர்வுகளை வல்லுனர்கள் குழுவுடன் ஆலோசித்து அறிவிப்பார்கள். அந்தநேரத்தில் இந்த கருத்துகளை அடிப்படையாக வைத்து எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்ற முடிவை அவர் எடுப்பார். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

14 நாட்களில் 83 மாணவர்களுக்கு கொரோனா

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்ற தகவல் அவ்வப்போது வருகிறது. அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்ட கடந்த 14 நாட்களில் 83 மாணவ-மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஒரே இடத்தில் அதிகம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக எங்கும் புகார் வரவில்லை. அப்படி வரும்போதுதான் நாம் பயப்படவேண்டிய நிலை இருக்கும். சுமார் 28 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றார்கள். பள்ளிக்கு வருவதற்கு பயம் இருந்தால், வீட்டில் இருந்தே படிக்கவும் வழிவகை செய்கிறோம்' என்றார்.

Next Story