மக்கள் இதயங்களை குளிர்விப்பதும் அரசுப்பணிதான் ‘மாவட்ட அளவிலேயே மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்'


மக்கள் இதயங்களை குளிர்விப்பதும் அரசுப்பணிதான் ‘மாவட்ட அளவிலேயே மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2021 9:59 PM GMT (Updated: 14 Sep 2021 9:59 PM GMT)

மாவட்ட அளவிலேயே மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். மக்கள் இதயங்களை குளிர்விப்பதும் அரசுப்பணியின் ஓர் அம்சமே என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கைப்பட கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கைப்பட கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட கலெக்டர் என்ற மகத்தான பொறுப்பில் இருக்கும் இளம் தோழர்களே! இன்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பதை நான் காண்கிறேன்.

‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்பது சிறப்புத்திட்டம். போர்க்கால அடிப்படையில் அலுவலர்கள் அந்த மனுக்களை அணுகியதால் அத்தனை மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது.

அதேபோன்று அனைத்து நேர்வுகளில் நாம் செயல்படுவது சாத்தியமில்லை. ஒரே நாளில் பத்தாயிரம் மனுக்கள் வந்து குவிகின்றன. முத்துக்குளிக்க மூச்சுப்பிடித்தவன் அதைப்போலவே எல்லா நேரங்களிலும் செயல்பட இயலாது. இந்த மனுக்கள் ஏன் வந்து இங்கு குவிகின்றன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மாவட்டம், வட்டம், சிற்றூர் அளவிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், உரிய காலத்தில் தீர்க்கப்படாமலிருப்பதால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அவர்கள் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்பட்டு விடுகிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே துரிதமாக தீர்ப்பதற்கு முனைய வேண்டும். முனைப்பாக இந்நேர்வில் கனிவோடும், பணிவோடும் செயல்பட்டால் அவர்கள் தலைமை செயலகத்தின் கதவுகளை தட்ட வேண்டிய தேவை எழாது.

இலக்குகளை அடைவது மட்டுமல்ல, மக்கள் இதயங்களை குளிர்விப்பதும் அரசுப்பணியின் ஓர் அம்சமே

அதிக மனுக்களை தீர்த்து வைக்கிற மாவட்ட கலெக்டருக்கு கேடயங்கள் வழங்குவதைவிட குறைவான மனுக்களை தலைமை செயலகம் எந்த மாவட்டத்தில் இருந்து பெறுகிறதோ, அந்த மாவட்டத்துக்கு அளிக்கிற நடைமுறையை கொண்டுவருமளவு உயர, உயரப் பறக்கும் பறவையைப் போல் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வெற்றி பெறுவோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story