தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை பா.ஜ.க.தான் தரமுடியும்: கே. அண்ணாமலை


தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை பா.ஜ.க.தான் தரமுடியும்:  கே. அண்ணாமலை
x
தினத்தந்தி 14 Sep 2021 10:12 PM GMT (Updated: 14 Sep 2021 10:12 PM GMT)

தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை பா.ஜ.க.தான் தரமுடியும் என கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.





சீா்காழி,

சீா்காழியில் நடந்த பா.ஜ.க. மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர்
கே. அண்ணாமலை பங்கேற்று பேசினார்.  மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம், நீட் தேர்வு, 3 வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. அரசு சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

சட்டசபை கூட்டம் தி.மு.க. தலைவரை துதிபாடும் கூட்டமாகவே இருந்தது.  தமிழகத்தின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உள்ளது.  இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்த தமிழக அரசு, தி.மு.க. அரசால் அந்த நிலையில் இருந்து மாறிவிட்டது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் 33 ஆயிரம் கோடியை கொண்டே அரசை நடத்துகின்றனா்.

ஆட்சியில் இல்லாதபோது டாஸ்மாக் வேண்டாம் என கூறியவா்கள், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா என்றும் கூட பாா்க்காமல் டாஸ்மாக்கை திறந்துள்ளனா்.

இந்தியாவில் 75 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பிரதமா் மோடி சாதனை படைத்துள்ளாா். 5 தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதிகளவு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது.  நேர்மையான, ஊழல் இல்லாத தலைவா் (பிரதமா் மோடி) டெல்லியில் உள்ளதால்தான் கொரோனாவை எளிதாக இந்தியா வெல்ல முடிந்தது.

கடந்த 2020ம் ஆண்டில் தமிழகத்துக்கு 12 புதிய மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு கொடுத்து ஏழை, எளிய மாணவா்கள் மருத்துவா்கள் ஆவதற்கு காரணமாக இருந்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும்போது அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். 2020ல் மட்டும் தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் அரசு பள்ளியில் படித்த 435 மாணவா்கள் மருத்துவா்களாக ஆகியுள்ளனா்.

தி.மு.க. ஆட்சியில் நீட் இல்லாதபோது அரசு பள்ளிகளில் படித்து அரசு மருத்துவ கல்லூரி சென்றவா்கள் 190 பேர் மட்டுமே. மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகத்தில் நேர்மையான, நியாயமான ஆட்சியை பா.ஜ.க.தான் தரமுடியும் என்றாா்.


Next Story