மாநில செய்திகள்

தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தற்கொலை: ‘நீட்’டை நீக்குவதில் சமரசம் கிடையாது - மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை + "||" + Ariyalur student commits suicide: No compromise on removal of 'Need' - MK Stalin

தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தற்கொலை: ‘நீட்’டை நீக்குவதில் சமரசம் கிடையாது - மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தற்கொலை: ‘நீட்’டை நீக்குவதில் சமரசம் கிடையாது - மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
தமிழகத்தில் `நீட்' தேர்வு காரணமாக மாணவ-மாணவிகள் தற்கொலை செய்யும் சோகம் தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
அரியலூர்,

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்

இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவி நீட் தேர்வு எழுதிவிட்டு, தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 52), இவரது மனைவி ஜெயலட்சுமி (44). இருவரும் வக்கீல்கள் ஆவர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கயல்விழி (20). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

2-வது மகள் கனிமொழி (17). இவர் ஜெயங்கொண்டம் கோகிலாம்பாள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்தார். அவர் 562.28 மதிப்பெண்கள் (93 சதவீதம்) எடுத்து தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இவர் `நீட்' தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்காக முழுமையாக தன்னை தயார்படுத்திக் கொண்ட கனிமொழி கடந்த 12-ந்தேதி தஞ்சையில் நடந்த `நீட்' தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார்.

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி கனிமொழி மிகவும் சோகத்தோடு இருந்துள்ளார். இதுகுறித்து தனது தாய்-தந்தையிடம் கூறும்போது, `நீட்' தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை எனவும், இரண்டு பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளும் மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அதற்கு தாய்-தந்தை இருவருமே கனிமொழியிடம் கவலைப்பட வேண்டாம். அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் தேர்வு எழுதிவிட்டு வந்த கனிமொழி தொடர்ந்து சோகமாக காணப்பட்டுள்ளார். இதனை கண்ட கருணாநிதி தனது மகளை தனியாக விடாமல் நேற்று முன்தினம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது வக்கீல் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மாலை 5 மணி அளவில் தந்தையும், மகளும் ஜெயங்கொண்டம் அருகே அவர்கள் தற்காலிகமாக தங்கி இருக்கும் துளரங்குறிச்சி என்ற ஊருக்கு வந்தனர். அங்குள்ள வீட்டில் மகளை மட்டும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு, கருணாநிதி அரியலூரில் உள்ள தனது உறவினரின் கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு சென்று இருந்த தனது மனைவி ஜெயலட்சுமியை அழைத்துக்கொண்டு இரவு 8.30 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் வெளியே நின்று தனது மகளை கதவை திறக்கும்படி அழைத்துள்ளார். ஆனால் எவ்வித சத்தமும் வராததால் பின்பக்கம் உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட்டுக்கும், ஹாலோபிளாக் கல்லுக்கும் இடையே உள்ள இடைவெளியின் வழியாக உள்ளே இறங்கி பார்த்துள்ளார். அப்போது கனிமொழி முன்பக்க வராண்டாவில் நைலான் கயிற்றினால் ஆன தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கருணாநிதியும், அவரது மனைவி ஜெயலட்சுமியும் மகளின் பிணத்தை பார்த்து கதறி துடித்தனர்.

பின்பு தனது சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்திற்கு தனது காரிலேயே கருணாநிதி மகளின் உடலை தூக்கி வந்துள்ளார். மாணவியின் சாவு அந்த கிராமத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி கனிமொழி மரணத்தை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'நீட்' எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளை பற்றிக் கொண்டு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் ‘நீட்' தேர்வினை தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழு வீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று, ‘நீட்' தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.

‘நீட்' தேர்வு என்பது தகுதியை எடைபோடும் தேர்வல்ல என்பதை, ஆள் மாறாட்டம் - வினாத்தாள் விற்பனை - பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் ‘நீட்' தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாக பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன். உயிர் காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.

மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.