நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை


நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Sep 2021 7:38 AM GMT (Updated: 15 Sep 2021 8:05 AM GMT)

நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் வேலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்,

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால் சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட சோகம் மறைவதற்குள் மற்றொரு மாணவி நீட் தோல்வி அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சவுந்தர்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வில் சரியாக எழுதவில்லை இதனால் மதிப்பெண் குறையும் என்று தவறான எண்ணத்தால் மாணவி சவுந்தர்யா கடந்த சில நாட்களாக மிகுந்த விரக்தி மற்றும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.  

இந்நிலையில், மாணவி சவுந்தர்யா இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு சரியாக எழுதவில்லை இதனால் மதிப்பெண் குறையும் என விரக்தியில் மாணவி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவ/மாணவிகள் மனரீதியிலான கவுன்சிலிங் பெற ’104’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Next Story