ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் நாளில் 378 பேர் மனு செய்தனர்


ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் நாளில் 378 பேர் மனு செய்தனர்
x
தினத்தந்தி 15 Sep 2021 9:12 PM GMT (Updated: 15 Sep 2021 9:12 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 378 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

சென்னை,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்ட நெரிசல் காணப்பட்டது.

முதல் நாளில் மட்டும் 9 மாவட்டங்களிலும் மொத்தம் 378 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் நாட்களில் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளில் 378 வேட்பு மனுக்கள்

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 351 வேட்புமனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 25 வேட்புமனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 வேட்புமனுக்களும் என 9 மாவட்டங்களிலும் 378 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஒன்றியங்களில் ஊராட்சித்தலைவர் பதவிக்கு 2 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 25 பேரும் என மொத்தம் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 30 வேட்பு மனுக்களும் என மொத்தம் 32 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

Next Story