உள்ளாட்சி தேர்தல் இடங்கள் பங்கீடு: தி.மு.க. கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை துரைமுருகன் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல் இடங்கள் பங்கீடு: தி.மு.க. கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை துரைமுருகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sep 2021 10:56 PM GMT (Updated: 15 Sep 2021 10:56 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான இடங்கள் பங்கீடுவது குறித்து கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்களை துரைமுருகன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்தநிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி உள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து இதே கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை

இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. ஆயத்தமாகி உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்து பேசி, சுமுக முடிவு செய்திட வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story