உள்ளாட்சி தேர்தல்: மத்திய போலீஸ் படையினரை அதிகளவில் நியமிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி மனு


உள்ளாட்சி தேர்தல்: மத்திய போலீஸ் படையினரை அதிகளவில் நியமிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி மனு
x
தினத்தந்தி 15 Sep 2021 11:01 PM GMT (Updated: 15 Sep 2021 11:01 PM GMT)

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த மத்திய போலீஸ் படையினரை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி மனு அனுப்பி உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

234 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், வெறும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்துவது அவசியமற்றது.

கண்காணிப்பு கேமரா

தேர்தலை 2 கட்டமாக நடத்துவதால் ஆளுங்கட்சியினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த தேர்தலை நியாயமாக நடத்த மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வேறு மாநில அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கவும், வாக்காளர்கள் மிரட்டப்படுவதை தவிர்க்கவும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்கு எண்ணும் மையத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பெட்டிகள் 24 மணி நேர கண்காணிப்புடன் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட வேண்டும்.

பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்

மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் வாக்குப்பெட்டிகள் கண்காணிக்கப்பட வேண்டும். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இதுபோன்ற முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

தேர்தலின்போது வாகனங்களில் சட்டவிரோதமாக பணம் மற்றும் மதுபாட்டில்கள் எடுத்துச்செல்வதை தடுக்க பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட வேண்டும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

மத்திய போலீஸ் படை

கொரோனாவை கருத்தில்கொண்டு, பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பிரசாரத்தில் ஈடுபடும் நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி இணையதளம் வாயிலாக பிரசாரம் மேற்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.

பள்ளி மைதானம், வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் பகுதி போன்றவற்றில் அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்துவதை தடுக்க வேண்டும். திறந்தவெளி பகுதியில் 100 நபர்களும், குறுகிய பகுதிகளில் 50 நபர்களும் பிரசாரத்தில் ஈடுபடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாநில போலீசார், அரசு அலுவலர்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அதிக அளவில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story