மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் புதிய ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் புதிய ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Sep 2021 12:12 AM GMT (Updated: 16 Sep 2021 12:12 AM GMT)

தமிழகத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் புதிய ஆக்கிரமிப்பு இல்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கால்நடைகளுக்கு உணவு வழங்கும் விதமாக புல் உள்ளிட்ட தாவரங்கள் வளர்ப்பதற்கு மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலங்களை வகை மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக கால்நடைத்துறை சார்பில் அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த நிலங்களை ஆக்கிரமித்து 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

பட்டா ரத்து

தமிழகம் முழுவதுமுள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை சுமார் 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பலர் ஆக்கிரமித்து அவர்களின் பெயருக்கு பட்டாவும் பெற்றுள்ளனர். இதனால் விலங்கினங்கள் தங்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்து உயிர்வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை மீட்கவும், அந்த நிலங்களில் குடியிருப்போருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்

புதிய ஆக்கிரமிப்பு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மக்கள் தொகை அதிகரிப்பு, வேலைவாய்ப்பு பெருக்கத்துக்காக புதிய தொழிற்சாலைகள் உருவாக்கம் போன்ற காரணங்களால், இதுபோன்ற நிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஒரு புதிய ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Next Story