ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை


ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை
x
தினத்தந்தி 16 Sep 2021 7:50 PM GMT (Updated: 16 Sep 2021 7:50 PM GMT)

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ மத்திய அரசு இயற்றியது.

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்கக்கோரி நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்கள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முடக்கம் செய்ய அதிகாரம்

அதில், ‘புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சுய ஒழுங்கு நடைமுறை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட வெளியீட்டாளர்களிடம் விளக்கம் கேட்காமலேயே முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பது தன்னிச்சையானது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

இந்த வழக்கிற்கு மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை சமூக வலைதளங்களில் வெளியிடவோ, பரப்பவோ கூடாது. நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே இந்த விதிகள் கொண்டு வரப்பட்டது’’ என்று கூறப்பட்டு இருந்தது.

தடை விதிப்பு

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், ‘இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இது நாடு முழுவதுக்கும் பொருந்தும். இந்த விதிகளை எதிர்த்து நாடு முழுவதும் பல ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்துள்ள மனு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது’ என்று கூறினார்.

சுதந்திரம் பறிப்பு

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மும்பை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்று கூறினாலும், இந்த புதிய சட்டத்தின் விதிகளை கண்டிப்பாக பின்பற்றும்படி டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு, மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதியின் 9-வது பிரிவின் 3-வது உட்பிரிவு டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்கும் அதிகாரம் வழங்குகிறது’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மத்திய அரசின் கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது என்பது ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல். எனவே, ஊடகங்களை கண்காணிக்கும் ஒரு உட்பிரிவுக்கு மட்டும் இடைக்கால தடை விதிக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

Next Story