நாளை தமிழக கவர்னராக பொறுப்பு ஏற்கிறார் சென்னை வந்த ஆர்.என்.ரவியை, மு.க.ஸ்டாலின் வரவேற்றார்


நாளை தமிழக கவர்னராக பொறுப்பு ஏற்கிறார் சென்னை வந்த ஆர்.என்.ரவியை, மு.க.ஸ்டாலின் வரவேற்றார்
x
தினத்தந்தி 16 Sep 2021 9:12 PM GMT (Updated: 16 Sep 2021 9:12 PM GMT)

தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நேற்று இரவு சென்னை வந்தார். அவரை மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நாளை தமிழக கவர்னராக பொறுப்பு ஏற்கிறார்.

சென்னை,

தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், மத்திய அரசு உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நாகலாந்து மாநில கவர்னராக 2019-ம் ஆண்டு பொறுப்பேற்றார். நாகலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஆர்.என்.ரவி முக்கிய பங்கு வகித்தவர்.

மு.க.ஸ்டாலின் வரவேற்றார்

தமிழகத்தின் 15-வது கவர்னராக ஆர்.என்.ரவி, நாளை (சனிக்கிழமை) பொறுப்பு ஏற்க உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆர்.என்.ரவிக்கு சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்றார்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டில் ஆகியோரும், புதிய கவர்னரை வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினும், ஆர்.என்.ரவியும் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

நாளை பதவி ஏற்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை காலையில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. ஆர்.என்.ரவிக்கு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில், மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

Next Story