அமைச்சர்களை மட்டுமல்ல அதிகாரிகளையும் கண்காணிப்பேன் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு


அமைச்சர்களை மட்டுமல்ல அதிகாரிகளையும் கண்காணிப்பேன் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2021 9:57 PM GMT (Updated: 16 Sep 2021 9:57 PM GMT)

அமைச்சர்களை மட்டுமல்ல அதிகாரிகளையும் கண்காணிப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவை விதி 110-ன்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள், அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொரோனா காலத்திலும் தொய்வு இல்லாமல் மக்களுக்கு பணியாற்றுவதன் மூலமாக இந்த அரசுக்கு சிறப்பான பெயரை தேடித் தந்திருக்கிறீர்கள். இந்த ஒத்துழைப்பும், செயல்பாடும் எப்போதும் நீடிக்க வேண்டும்.

இனிமேல்தான் உங்களுக்கு கடினமான பொறுப்பு இருக்கிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். அவற்றையெல்லாம் நிறைவேற்ற நீங்கள்தான் பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.

5 மலைகள்

5 மலைகளை நாம் தாண்டியாக வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. சார்பில் உறுதிமொழிகள் கொடுத்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கியிருக்கின்றன. மாவட்ட ரீதியாகவும் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம்.

கவர்னர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, சட்டமன்றத்தில் துறைவாரியாக வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள், அவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் ஆகிய 5 மலைகளையும் தாண்டும், அதாவது அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம்தான் இருக்கிறது. இந்த அறிவிப்புகள் அனைத்தையும் படிப்படியாக நாம் நிறைவேற்றியாக வேண்டும். இந்த அறிவிப்புகள் அனைத்தும் அரசாணைகளாக வர வேண்டும். அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

அமைச்சர்களை மட்டுமல்ல...

உதாரணமாக, ஒரு அறிவிப்பிற்கு பல துறைகளின் ஒத்துழைப்பு, அனுமதி தேவைப்படுகிறது. அவை குறித்து அந்தந்த துறைகளின் செயலாளர்கள் எல்லாம் ஓரிடத்தில் அமர்ந்து, துறை ரீதியான கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தொடர்புடைய துறைகளோடு ஒரு துணை கமிட்டி நீங்கள் நியமித்துக் கொள்ளலாம். அனைத்தும் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் அமைய வேண்டும். எந்தவொரு அறிவிப்பையும் செயல்படுத்தும்போது, வழக்குகள் வராமல், கோர்ட்டு தடையாணை, பிரச்சினைகள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு சட்டமன்றத்தில் அடுத்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எனவே இந்த 6 மாதத்திற்குள் நாம் செய்துள்ள அறிவிப்புகளை செயல்படுத்திட வேண்டும். எனவே, விவேகமாகவும் வேகமாகவும் நீங்கள் காரியங்களை ஆற்ற வேண்டும். நான் இந்த அறிவிப்புகள் செயல்படுத்துவது குறித்து அமைச்சர்களை கண்காணிப்பேன் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். எனவே, அமைச்சர்களை மட்டுமல்ல; ஒவ்வொரு துறை செயலாளர்களும் இந்த அறிவிப்புகளை குறித்த காலத்திற்குள் முடிக்கக்கூடிய வகையில் என்னுடைய கண்காணிப்பு இருக்கும்.

ஆன்லைன் தகவல் பலகை

கொரோனா காரணத்தினால் சில பொருளாதார நெருக்கடிகள் உள்ளன. இந்த சூழ்நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய நிதியை அந்தந்த திட்டப் பணிகளுக்கு முழுமையாகவும், முறையாகவும் செலவிட்டால் அந்தந்த அளவிற்கு நம் பொருளாதாரத்திற்கு உங்கள் திறமையான செயல்பாடுகள் தக்க வகையில் ஊக்கமளிப்பதாக அமையும்.

எனவே, அனைத்து துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை நான் தெரிந்துகொள்ளும் விதமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் “ஆன்லைன் தகவல் பலகை” ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் தகவல்களை நான் தினமும் பார்க்க போகிறேன். தகவல்களை அளிக்கும் வகையில்தான் “ஆன்லைன் தகவல் பலகை” ஏற்படுத்தப்பட இருக்கிறது. என்னுடைய அறையிலேயே பெரிய திரை ஒன்றை வைத்து, தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது.

ஆய்வு செய்வேன்

எனவே, நாம் அளித்த வாக்குறுதிகள், வெளியிட்ட அனைத்து அறிவிப்புகள், அரசின் முக்கியத் திட்டங்கள், அவை தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு எனத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்லாட்சியை வழங்க, நாம் நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டங்களும் தகவல்களும் இந்தத் தகவல் பலகையில் இடம்பெறும். அந்த தகவல்கள் தினந்தோறும் ‘அப்டேட்’ செய்யப்படும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படப் போகிறார்.

வாரம் ஒருமுறை இந்த தகவல் பலகையை வைத்து நான் ஆய்வு செய்யப் போகிறேன். அறிவிப்பு தொடர்பாக அரசாணை போட்டுவிட்டோம் என்பதால் அறிவிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அதன் பலன் மக்களை சென்றடைய வேண்டும். அப்போதுதான் நாம் அறிவிப்பை செயல்படுத்தி விட்டோம் என்று அர்த்தமாகும்.

ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்துவதற்கு கால நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அந்த காலத்துக்குள் நிறைவேற்றுங்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் இணைந்து செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story