மாநில செய்திகள்

கே.சி.வீரமணி வீட்டில் போலீசார் சோதனை: ‘‘உள்ளாட்சி தேர்தலில் செயல்பட விடாமல் தடுக்கும் முயற்சி’’ + "||" + Police raid KC Veeramani's house: '' Attempt to prevent local elections ''

கே.சி.வீரமணி வீட்டில் போலீசார் சோதனை: ‘‘உள்ளாட்சி தேர்தலில் செயல்பட விடாமல் தடுக்கும் முயற்சி’’

கே.சி.வீரமணி வீட்டில் போலீசார் சோதனை: ‘‘உள்ளாட்சி தேர்தலில் செயல்பட விடாமல் தடுக்கும் முயற்சி’’
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் போலீசார் சோதனை நடத்தியது, அவரை உள்ளாட்சி தேர்தலில் செயல்பட விடாமல் தடுக்கும் முயற்சி என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கபட நாடகம்

உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கட்சியின் தீவிர செயல் வீரருமான கே.சி.வீரமணியினுடைய வீட்டிலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தவர்கள் என்று சுமார் 28 இடங்களில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, போலீசார் சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இது, உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை.


தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் சமயத்தில் நிறைவேற்ற முடியாத 505-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிய பின்னும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், தமிழக மக்களின் வெறுப்பிற்கு தி.மு.க. அரசு ஆளாகியுள்ளது. மக்களின் எதிர்ப்பு உணர்வை, கசப்பான மன ஓட்டத்தை மாற்ற, தி.மு.க. அரசு அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தேர்தல் சமயத்தில் தி.மு.க.வின் அராஜகத்தை எதிர்த்து நின்று ஜனநாயகக் கடமையாற்றிய கட்சியின் செயல் வீரர்கள் என்று பலர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பெயரில் தனது காவல் துறையினரை ஏவி பலவித இடையூறுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

தேர்தல் பயம் தெரிகிறது

பொதுவாக, உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாகத்தான் நடைபெறும். ஆனால், வெறும் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் இருந்தே தி.மு.க.வின் தேர்தல் தோல்வி பயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

இந்தத் தேர்தலை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்; அதைக் காரணமாக வைத்து உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று ஆளும் தி.மு.க.வினர் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தி.மு.க. மற்றும் மு.க.ஸ்டாலினின் அதிகார வர்க்கம் மற்றும் குடும்ப ஆதிக்கம் ஆகியோரின் கூட்டணியை, ஜனநாயக முறைப்படி எதிர்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முழு முயற்சியுடன் தயாராக உள்ளோம்.

பழிவாங்கும் படலம்

இன்று, ஏற்கனவே அறிவித்தபடி, அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த 120 நாட்களில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோவை எஸ்.பி.வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து, ஜோலார் பேட்டை கே.சி.வீரமணி வீட்டிலும், அவரது நண்பர்கள் என்று போலீசாரே முடிவு செய்த சுமார் 28 இடங்களிலும் இன்று சோதனை என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க.வும், அதன் நிர்வாகிகளும், ரத்தத்தின் ரத்தமான செயல் வீரர்களும், என்றும் அடிபணிந்ததில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

ஏனென்றால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எப்போதுமே சட்டத்தின் ஆட்சியைத்தான் தமிழகத்தில் நடத்தி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. அரசும் சட்டப்படிதான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. எனவே, இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொள்வோம்; வெற்றி பெறுவோம்.

அரசியல் கட்சிகளை மிரட்டி, அதன்மூலம் மக்களைப் பணியவைத்து, தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்காமல், ‘‘மக்களை பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்’’ என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவோ பயங்கரவாதிகள் பயிற்சி தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை
மாவோ பயங்கரவாதிகள் தொடர்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2. ஆம்புலன்ஸ் வர தாமதம்: விபத்தில் சிக்கியவரை மீட்ட போலீசார் சரக்கு வேனில் அழைத்து சென்று சிகிச்சை
விபத்தில் சிக்கியவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
3. சொகுசு கப்பலில் போதை விருந்து; திரைப்பட தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சம்மன்
கோவா சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
4. தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 65 பேர் மாயம்
தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 65 பேர் மாயம் படகில் கனடா தப்பிச்சென்றார்களா? கியூ பிரிவு போலீசார் விசாரணை.
5. வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.