மாநில செய்திகள்

சென்னை, திருப்பத்தூர் உள்பட 35 இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை + "||" + In 35 places, including Chennai and Tirupati, former minister K.C. Anti-corruption check at Veeramani's house and offices

சென்னை, திருப்பத்தூர் உள்பட 35 இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை, திருப்பத்தூர் உள்பட 35 இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்புடைய 35 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை,

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் புரிந்த அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது தேர்தல் பிரசாரத்தின் போதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை போட்டு நடவடிக்கை எடுத்தனர்.


அதன்பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, கோவை, சென்னை மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 3-வதாக சிக்கி இருப்பவர் அ.தி.மு.க. முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி.

இவர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். ரூ.28.78 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக 6 மடங்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

35 இடங்களில் அதிரடி சோதனை

இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று அதிகாலை முதல் கே.சி.வீரமணி தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் இந்த சோதனை வேட்டை நடத்தினார்கள்.

சென்னை வீட்டில் சோதனை

சென்னையில் சாந்தோம், லீத் காஸ்டல் வடக்கு சாலையில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டில் சோதனை நடந்தது. அந்த வீட்டின்முன்பு நின்ற 2 கார்களிலும் சோதனை போடப்பட்டது.

சோதனை நடந்த போது கே.சி.வீரமணி அந்த வீட்டில் இல்லை. அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது சொந்த வீட்டில் இருந்தார்.

வீட்டுக்கு ‘சீல்’ வைப்பு

சென்னை சூளைமேடு, கில் நகர் சிவானந்தா சாலையில் உள்ள ஒரு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை போடச்சென்றனர். அந்த வீடு பூட்டி கிடந்தது. இதனால் அந்த வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து விட்டு சென்றனர். அந்த வீட்டில் தனியார் பால் கம்பெனி அதிகாரி ஒருவர் வசித்ததாக தெரிகிறது. அவர் கே.சி.வீரமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மற்றொரு நாளில் அந்த வீட்டில் சோதனை போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை கொளத்தூர் செண்பகா நகரில் உள்ள மற்றொரு வீட்டிலும் சோதனையிட்டனர். ஆனால் அந்த வீடு விற்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அது தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. நேற்று அதிகாலை தொடங்கிய இந்த சோதனை வேட்டை மாலையிலும் நீடித்தது.

ஆதரவாளர்களின் வீடுகள்

மேலும் ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள வீரமணியின் வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்தாஸ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது வீரமணி வீட்டில் இல்லாததால் நாட்டறம்பள்ளி சாலையில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்த வீரமணியை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ஓட்டல் ஹில்ஸ், ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஓட்டல் ஹில்ஸ் ஆகிய இடங்களில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை சோதனையை தொடங்கினர்.

நாட்டறம்பள்ளி சாலையில் அமைந்துள்ள மற்றொரு வீடு, வீரமணியின் சகோதரர்கள் கே.சி.காமராஜ், கே.சி.அழகிரி ஆகியோரின் வீடுகள், வீரமணியின் குடும்பத்துக்கு சொந்தமான பீடி மண்டி, தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ், திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ் ஆகியோரின் வீடுகள், ஜோலார்பேட்டை- நாட்டறம்பள்ளி சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம், நாட்டறம்பள்ளி மல்லகுண்டா பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா, நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சாம்ராஜ், நாட்டறம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ், ஜோலார்பேட்டை நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வீடுகள் உள்பட 13 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

போளூர்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மாமனார் பழனி, சின்ன மாமனார் கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகள் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த குருவிமலை கிராமத்தில் உள்ளது. இங்கும் நேற்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கார்த்திகேயன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருக்கிறார்.

வேலூர்

வீரமணியின் ஆதரவாளரான அ.தி.மு.க. வேலூர் ஒன்றிய செயலாளர், வேலூர் சத்துவாச்சாரி வசந்தம் நகரை சேர்ந்த கர்னல் வீட்டிலும், சேண்பாக்கத்தில் உள்ள மாநகர மாவட்ட துணை செயலாளர் ஜெயபிரகாஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

காலை 6.30 மணி அளவில் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்வது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அ.தி.மு.க.வி.னர் வீரமணியின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

நட்சத்திர ஓட்டலிலும் சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிப்காட் வளாகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான பிரமாண்ட நட்சத்திர ஓட்டல் மற்றும் திருமண மண்டபம் உள்ளது. இங்கும் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

பெங்களூருவில் 2 இடங்களிலும், சென்னையில் 6 இடங்களிலும் என மொத்தம் 35 இடங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாவோ பயங்கரவாதிகள் பயிற்சி தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை
மாவோ பயங்கரவாதிகள் தொடர்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2. சொகுசு கப்பலில் போதை விருந்து; திரைப்பட தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சம்மன்
கோவா சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
3. வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு புகார்: பிரபல ஜவுளிக்கடை, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.
4. பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை நடத்த பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளப்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
5. சென்னையில் 35 இடங்களில் வருமானவரி சோதனை ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
சென்னையில் 35 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் 2 நிதி நிறுவனங்கள் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்ததுடன், கணக்கில் காட்டாத ரூ.9 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.