உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அ.தி.மு.க.- பா.ஜனதா பேச்சுவார்த்தை


உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அ.தி.மு.க.- பா.ஜனதா பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 17 Sep 2021 9:56 PM GMT (Updated: 17 Sep 2021 9:56 PM GMT)

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று சந்தித்து உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சென்னை,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்க தி.மு.க. கூட்டணி தயாராக இருக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணி

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.

பா.ஜ.க.வை பொறுத்தவரையில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று அக்கட்சி தலைவர் கே.அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பெறுவது என்பது குறித்து அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் அண்ணாமலை ஆலோசனையும் மேற்கொண்டிருந்தார். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சந்திப்பு

இந்தநிலையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோர் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது, உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை இறுதி செய்வது குறித்து ஆலோசித்தார்கள். உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சிக்கு கணிசமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story