அதிகமாக குறும்பு செய்த 5 வயது சிறுவன் சுவரில் தள்ளி கொலை உறவுக்கார பெண் கைது


அதிகமாக குறும்பு செய்த 5 வயது சிறுவன் சுவரில் தள்ளி கொலை உறவுக்கார பெண் கைது
x
தினத்தந்தி 17 Sep 2021 10:55 PM GMT (Updated: 17 Sep 2021 10:55 PM GMT)

அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் சூடு வைத்தும், அடித்தும் கொடுமைப்படுத்தியதுடன், 5 வயது சிறுவனை சுவரில் தள்ளி கொலை செய்த உறவுக்கார இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர், 2-வது ரெயில்வே ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 35). இவருடைய மனைவி சூசை மேரி (30). இவர்களுக்கு 4 குழந்தைகள்.

இவர்களது வீட்டில் போதிய இடம் இல்லாததாலும், சூசை மேரி வேலைக்கு செல்வதாலும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியாததால் 2-வது குழந்தையான மகள் கீர்த்தி (8) மற்றும் 3-வது குழந்தையான மகன் ஆபேல் (5) ஆகியோரை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காமராஜர் நகர், எம்.ஜி.ஆர்.தெருவில் உள்ள சூசைமேரியின் சகோதரி டார்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

சிறுவன் சாவு

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டார்த்தி இறந்துவிட்டார். இதனால் டார்த்தியின் மகள் மேரி (20) இந்த 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு குழந்தை ஆபேல் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறி, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஆபேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சுவரில் தள்ளி கொலை

மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலில் தீக்காயங்கள், நகக்கீறல்கள் உள்ளிட்ட காயங்கள் இருந்ததால் பீர்க்கன்காரணை போலீசாருக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி கீர்த்தியிடம் விசாரித்தனர்.

அப்போது மேரி, அடிக்கடி தனது தம்பி ஆபேலை அடிப்பதுடன், சூடும் வைப்பார் என தெரிவித்தார்.

இதுபற்றி மேரியிடம் போலீசார் விசாரித்தபோது, சிறுவன் அதிகமாக குறும்புத்தனத்தில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் அவனை அடிக்கடி கையால் அடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியதாகவும், சம்பவத்தன்று மேரி, சிறுவனை பிடித்து சுவரில் தள்ளியதாகவும், இதனால் சுவரில் மோதி மயங்கி விழுந்த ஆபேல் இறந்து விட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மேரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story