போர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை கமல்ஹாசன் வலியுறுத்தல்


போர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Sep 2021 11:44 PM GMT (Updated: 17 Sep 2021 11:44 PM GMT)

போர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

1995-ல் போர்டு நிறுவனத்துடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் போர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன. 1996-ல் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் போர்டு நிறுவனம் சென்னையில் தன் தயாரிப்பைத் துவங்கியது.

முதற்கட்டமாக சுமார் 2,100 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்தது. பிறகு படிப்படியாக பல அடுக்குகளாக தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துகொண்டது. ஏறத்தாழ தமிழகத்தை ஆண்ட முதல்-அமைச்சர்கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நேரடியாக சுமார் 4,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25,000 பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது போர்டு இந்தியா நிறுவனம்.

வாழ்வாதாரம்

25 ஆண்டுகளுக்குப் பின் எங்களுக்கு பலத்த நஷ்டம், நிறுவனத்தை விரைவில் மூடப்போகிறோம்’ என அறிவித்திருக்கிறது போர்டு நிறுவனம். நிர்வாகத்தின் இந்தத் திடீர் முடிவினால் இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர். லாபம் வந்தால் எனக்கு, நஷ்டம் வந்தால் மூடிவிட்டு ஓடிவிடுவோம் எனும் குறுகிய மனப்போக்கு ஏற்புடையதல்ல. இதுநாள் வரை தமிழக அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், தளர்வுகள், உதவிகள், மானியங்கள், நீர் உள்ளிட்ட வளங்கள் ஆகியவற்றுக்குப் பொருளே இல்லாமல் ஆகிவிடும்.

தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு போர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story