இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா மத்திய மந்திரி பேச்சு


இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா மத்திய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 17 Sep 2021 11:52 PM GMT (Updated: 17 Sep 2021 11:52 PM GMT)

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.

சென்னை,

மத்திய தகவல்-ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு-பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவ மக்களுடன் நேற்று கலந்துரையாடினாா்.

அப்போது, மீனவ பிரதிநிதிகள் மத்திய மந்திரி எல்.முருகனிடம், தங்களுக்கு மானிய விலையில் அளிக்கப்படும் டீசல் அளவை 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி தர வேண்டும். ஏற்றுமதி கூடங்கள் அமைத்து தரவேண்டும். தற்போதைய மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைத்து, கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒரே காலத்தில் அதாவது புயல்கள் உற்பத்தியாகும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்க வேண்டும். மீன்பிடி உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கருவாடு காய வைக்க பிரத்தியேகமாக இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

சர்வதேச தரத்திற்கு இணையான

அதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

இந்தியாவில், சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி உள்பட 5 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச தரத்திற்கு இணையான நவீன மீன்பிடி துறைமுகமாக மாற்றப்பட உள்ளது. அதில், நீங்கள் (மீனவ பிரதிநிதி கள்) கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.

திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்திற்கான பணி 70 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இதுபோக, இன்னும் 6 மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வர உள்ள மீன்பிடி மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா

தமிழக மீன்பிடி சட்டத்தின்படி, 12 நாட்டிக்கல் மைல்களுக்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள் தான் பதிவு செய்யப்படுகிறார்கள். எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மீன்பிடி மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

மீனவ பெண்கள் பயன்பெறும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா கொண்டுவரப்பட உள்ளது. சுமார் ரூ.296 கோடியில் அமைய உள்ள கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்காவிற்காக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான இடம் தேர்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

படகில் சென்று ஆய்வு

மீனவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய மந்திரி எல்.முருகன் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மத்திய அரசின் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு கட்டுமான மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.200 கோடியில் கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுகத்தை மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரவீந்திரன், தமிழக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கூடுதல் செயலாளர் ஜவகர், மீன்வளத்துறை இயக் குனர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story