அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு மு.க.ஸ்டாலினை ஆஜராகும்படி சிறப்பு கோர்ட்டு வலியுறுத்தக் கூடாது


அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு மு.க.ஸ்டாலினை ஆஜராகும்படி சிறப்பு கோர்ட்டு வலியுறுத்தக் கூடாது
x
தினத்தந்தி 18 Sep 2021 12:24 AM GMT (Updated: 18 Sep 2021 12:24 AM GMT)

அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு மு.க.ஸ்டாலினை ஆஜராகும்படி சிறப்பு கோர்ட்டு வலியுறுத்தக் கூடாது ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்ததற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீது 18 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் எல்லாம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இதில் சில வழக்குகளில் ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்குகளை எல்லாம் திரும்பப் பெறுவதாக கூறி தமிழக அரசு கடந்த ஆகஸ்டு 10-ந்தேதி அரசாணை வெளியிட்டது. அதேநாளில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்பில், ‘எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு முன்பு அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டின் ஒப்புதலை மாநில அரசுகள் பெற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதையடுத்து, இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்யக் கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன், புதிய மனுக்கள் மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. இதுவரை மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜராகி வந்த வக்கீல் பி.குமரேசன் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பதவி ஏற்று விட்டதால், அவரது ஜூனியர் வக்கீல் செந்தில்முருகன் ஆஜராகி, ‘சுப்ரீம் கோர்ட்டு ஆகஸ்டு 25-ந் தேதி மற்றொரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கொடூர வழக்குகளை சம்பந்தப்பட்ட மாநில ஐகோர்ட்டின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு திரும்ப பெறக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் மீதான இந்த 18 வழக்குகளும் முன்னாள் ஆட்சியாளர்களை விமர்சித்து பேசியதற்காக மட்டுமே தொடரப்பட்டவை ஆகும்’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு அக்டோபர் 8-ந் தேதி பிறப்பிக்கப்படும். அதுவரை அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி மு.க.ஸ்டாலினை சிறப்பு கோர்ட்டு வலியுறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.

Next Story