மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Sep 2021 12:35 AM GMT (Updated: 19 Sep 2021 12:35 AM GMT)

சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் உள்பட பல்வேறு மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் 28 பேரை வேறு மாநில ஐகோர்ட்டுகளுக்கு இடமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 13 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளை வேறு ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்தும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதித்துறை வரலாற்றில், ஒரே நேரத்தில் இத்தனை நீதிபதிகளை ஒரு ஐகோர்ட்டில் இருந்து மற்றொரு ஐகோர்ட்டுக்கு மாற்றியது இதுவே முதல் முறையாகும். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக இருப்பவர் டி.எஸ்.சிவஞானம். இவரை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு நேற்று முன்தினம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இவருக்கு பதில், சென்னை ஐகோர்ட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து 2 ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமித்துள்ளது. அதாவது, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி எம்.என்.பண்டாரி, குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி பரேஷ் ஆர்.உபாத்யாய் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஒரு சில நாட்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும் என்று நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி பணியிட மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 56 நீதிபதிகள் உள்ளனர். 19 இடங்கள் காலியாக உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரையின்படி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, வெளிமாநிலங்களில் இருந்து 2 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு வந்தால், நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயரும்.

Next Story