9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அ.ம.மு.க.வுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆதரவு + "||" + Tamil Nadu Muslim League supports AIADMK in 9 district rural local elections
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அ.ம.மு.க.வுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆதரவு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அ.ம.மு.க.வுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆதரவு.
சென்னை,
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 5.16 சதவீத வாக்குகளைப் பெற்று 3-வது பெரிய கட்சி என நிரூபித்துக் காட்டியது. அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் அ.ம.மு.க.வை கட்சியாகப் பதிவு செய்தபோதும் மாநில தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கவில்லை. இருந்தபோதிலும் உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. சுயேச்சையாக தனது வேட்பாளர்களை களமிறக்கியது.
தனித்து நின்று போட்டியிட்ட அ.ம.மு.க., 95 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றது. ஆயிரத்து 216 இடங்களில் 2-வது இடம் பெற்றதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. வெற்றி, தோல்வியை நிர்ணயித்துள்ளது. இருகட்டங்களாக நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
அதுமட்டுமின்றி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தீவிர தேர்தல் பணி மேற்கொள்வார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.