கேரள துறைமுக கட்டுமான பணிக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் அமைச்சர் எ.வ.வேலுவை, கேரள மந்திரி சந்தித்து கோரிக்கை


கேரள துறைமுக கட்டுமான பணிக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் அமைச்சர் எ.வ.வேலுவை, கேரள மந்திரி சந்தித்து கோரிக்கை
x
தினத்தந்தி 19 Sep 2021 11:18 PM GMT (Updated: 19 Sep 2021 11:18 PM GMT)

புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் கேரள துறைமுக கட்டுமான பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலுவை, கேரள மந்திரி சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவை, கேரள துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத்துறை மந்திரி அகமது தேவர்கோவில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்களின் செயல்பாடுகள், அங்குள்ள வசதிகள் குறித்தும், கேரளாவில் உள்ள சிறு துறைமுகங்கள் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாநில துறைமுக அலுவலர் எம்.அன்பரசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கட்டுமான பொருட்கள்

கூட்ட முடிவில் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் துறைமுக கட்டுமானத்துக்கு தேவையான பெரிய பாறை போன்ற கட்டுமான பொருட்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரப்பட்டது.

துறைமுக கட்டுமான பணிக்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் கடிதமாக பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய முடிவு எடுக்கப்படும்.

உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்

கேரளாவில் அமைய உள்ள இந்த துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் அமைய உள்ளதால் அங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும்.

சிறுதுறைமுகங்கள் விவகாரத்தில் மத்திய அரசின் புதிய மசோதாவை எதிர்க்கிறோம். இந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதுணையாக இருக்கும்

கேரள மந்திரி அகமது தேவர் கோவில் கூறும்போது, ‘எங்களது கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிப்பதாக தெரிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கீழடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கும் முயற்சிக்கு கேரள அரசு உறுதுணையாக இருக்கும்.

பண்டைய காலத்தில் தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையேயான தொடர்புகள் நிறைய இருக்கின்றது. அதை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும் கேரள அரசு தயாராக உள்ளது. சுற்றுலாவில் முக்கிய இடமாக திகழும் கேரளாவை மேம்படுத்த தமிழக அரசுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என்றார்.

Next Story