தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை கூடுதலாக வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்


தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை கூடுதலாக வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Sep 2021 12:03 AM GMT (Updated: 20 Sep 2021 12:03 AM GMT)

தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை என்றும், கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளதாகவும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நேற்று மாலை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 2-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4.12 கோடி தடுப்பூசிகளை அரசே செலுத்தி உள்ளது. இன்றுடன் (நேற்று) கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்துவிடும். இந்த நிலையில் நாளையே (இன்று) கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. எனவே உடனே தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இந்த ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குமா? என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்காலம் என்பதால் அக்டோபர் வரை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு பரிசோதனையில், தொற்று இல்லை என்று வந்தாலும் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story