மாநில செய்திகள்

சென்னை: 7 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய விமான போக்குவரத்து + "||" + Air traffic returned to normal after 7 months at Chennai Airport

சென்னை: 7 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய விமான போக்குவரத்து

சென்னை: 7 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய விமான போக்குவரத்து
சென்னை விமான நிலையத்தில் 7 மாதங் களுக்கு பிறகு விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்தால் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வெகுவாக குறைந்தது. ஒரு நாளுக்கு 60-ல் இருந்து 70 வரையிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த விமானங்களிலும் சுமாா் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் வரையிலான பயணிகளே பயணித்தனா். தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்தாலும், 3-வது அலை தொடங்கலாம் என்ற அச்சம் உள்ளது. ஆனாலும் விமான பயணம் பாதுகாப்பானது என்பதால் பயணிகள் பலா் விமானங்களில் பயணிக்க தொடங்கி உள்ளனா்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மே மாதம் கடைசி வாரத்தில் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 என மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயணித்தனா்.

ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. ஜூலை மாதத்தில் ஒரு நாளுக்கு சுமாா் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பயணித்தனா். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் என 140 விமானங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்தனா்.

இந்த நிலையில் ஆகஸ்டு மாதத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளன. சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் வந்த விமானங்களின் எண்ணிக்கை 180 வரை இருந்தது. இதில் சுமாா் 18 ஆயிரம் போ் வரை பயணித்து உள்ளனா்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று 100 புறப்பாடு விமானங்களில் 11,584 பேரும், 100 வருகை விமானங்களில் 11,633 பேரும் பயணம் செய்து உள்ளனர். ஒரே நாளில் 31 நகரங்களுக்கு 200 விமானங்களில் மொத்தம் 23,217 போ் பயணித்து உள்ளனா். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஆமதாபாத், கொச்சி, தூத்துக்குடி, கோவை ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பூசி மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு காரணமாக விமான பயணங்கள் அதிகரித்து உள்ளன. தற்போது விமான சேவைகளில் பழையபடி இயல்பு நிலைக்கு விமான போக்குவரத்து திரும்பி உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் உள்நாட்டு விமான சேவை 300-க்கும் அதிகமாக இயக்கப்படும்.

பன்னாட்டு விமான சேவை மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக 10-க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்தே உள்ளது. மத்திய அரசு கொரோனா தளர்வுகளை அறிவித்ததும் பன்னாட்டு விமான போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்திற்கு பார்சல்களில் வந்த சிலந்திகள்
சென்னை விமான நிலைய தபால் பிரிவிற்கு, சிலந்திகள் பார்சல்களில் மறைத்து வைத்து அனுப்பப்பட்டுள்ளன.
2. சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.