"தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்


தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 20 Sep 2021 2:21 PM GMT (Updated: 20 Sep 2021 2:21 PM GMT)

தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி, கொரோனா தொற்றுக்கு எதிரான எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் ஆரம்பக்கட்ட முதல் 4 மாதத் தடுப்பூசி செலுத்துதலில் போதிய வேகம் இல்லாததால், தற்போது தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது. இதனால் கடந்தகாலப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தமிழகத்துக்கு உடனடியாகக் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாகத் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வெற்றிகரமாகச் செலுத்த முடியும் என்பதால், அந்த எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசிகளை உயர்த்தி வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story