வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க ஏற்பாடு


வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 20 Sep 2021 8:14 PM GMT (Updated: 20 Sep 2021 8:14 PM GMT)

வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சேலம்,

சேலத்தில் நேற்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பாசனமற்ற ஏரிகளை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 500 குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. அதில், இந்த ஆண்டு முதற்கட்டமாக 200 குளங்கள் தூர் எடுத்து அவற்றை சீர் செய்யப்படும். தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் சாக்கடை கால்வாய்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு செல்லும் வகையில் சிறப்பு தூய்மை பணி முகாம் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

புதிய நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சேலம் மட்டுமின்றி பல நகரங்களிலும் பாதாள சாக் கடை திட்ட பணிகள் விரைவாக முடிக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது பற்றி துறை சார்ந்த அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகிறார்கள். முறைகேடு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது.

வார்டு மறுசீரமைப்பு

நகரப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார்கள். வார்டுகளை பிரித்து மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடக்க வேண்டியுள்ளது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 6 மாநகராட்சிகளும், 29 நகராட்சிகளும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதை எல்லாம் சேர்க்கும்போது வார்டு மறு சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அந்த பணிகளை அதிகாரிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். வார்டுகள் மறுவரை செய்து 15 முதல் 20 நாட்களில் அதுபற்றிய விவரம் அறிவிக்கப்படும். அதன்பிறகு 100 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். மறுபடியும் அறிவிக்கும்போது, 30 நாட்கள் அவகாசம் வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க முதல்-அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார். எப்போது தேர்தல் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மக்கள் தொகையின் அடிப்படையில் மாநகராட்சியில் உள்ள வார்டுகள் பிரிக்கப்பட உள்ளன. 3 லட்சம் வாக்காளர்கள் இருந்தால் 50 முதல் 58 வார்டுகளும், 3 லட்சம் முதல் 5 லட்சம் வாக்காளர்கள் இருந்தால் 80 வார்டுகளும், 5 லட்சத்திற்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் 100 வார்டுகளாகவும் பிரிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Next Story