‘நீட்’ தேர்வு பிரச்சினை போல் ‘7 பேர் விடுதலையையும் தி.மு.க. அரசு நீர்த்துப்போக செய்துவிட்டதோ?’ ஓ.பன்னீர்செல்வம் கேள்வி


‘நீட்’ தேர்வு பிரச்சினை போல் ‘7 பேர் விடுதலையையும் தி.மு.க. அரசு நீர்த்துப்போக செய்துவிட்டதோ?’ ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
x
தினத்தந்தி 20 Sep 2021 9:07 PM GMT (Updated: 20 Sep 2021 9:07 PM GMT)

‘நீட்’ தேர்வு பிரச்சினை போல் 7 பேர் விடுதலையையும் தி.மு.க. அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டதோ என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து செய்தியாளர்களிடையே பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியின் பதிலை பார்க்கும்போது, ‘கழுவுற மீனிலே நழுவுற மீன்’ என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், 19-5-2021 அன்று ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். முதல்-அமைச்சர் கடிதம் எழுதி 124 நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது பொதுமக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உறுதி செய்ய வேண்டும்

இந்த சூழ்நிலையில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக, முந்தைய கவர்னரால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் புதிய கவர்னரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது’ என்று சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. அமைச்சரின் பேட்டியை பார்க்கும்போது, இந்த பிரச்சினையையும் ‘நீட்’ பிரச்சினை போல தி.மு.க. அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டதோ என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது.

எனவே, முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, தனிப்பட்ட முறையிலும், தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தைக் கொடுத்து, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story