அ.தி.மு.க. தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றது சட்டவிரோதம் இல்லை ஐகோர்ட்டு உத்தரவு


அ.தி.மு.க. தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றது சட்டவிரோதம் இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Sep 2021 11:38 PM GMT (Updated: 20 Sep 2021 11:38 PM GMT)

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதில் சட்டவிரோதம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் வக்கீல் ராம்குமார் ஆதித்தன். அ.தி.மு.க. தொண்டரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதிய பதவிகள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணத்துக்கு பின், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது. அதற்கு பதில் கட்சியை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

இதுகுறித்து பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.

ரத்து செய்ய வேண்டும்

ஆனால், அ.தி.மு.க. விதிகளின்படி அதிகாரம் அனைத்தும் பொதுச்செயலாளருக்குத்தான் வழங்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை மாற்றி, பொதுச்செயலாளர் பதவியை இதுபோல கலைக்க முடியாது. எனவே, புதிய பதவிகளை உருவாக்கி இயற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதம். எனவே, இந்த தீர்மானத்தை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா மரணத்தின்போது அமலில் இருந்த விதிகளைப் பின்பற்ற அ.தி.மு.க. தலைமைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

சட்டவிரோதம் இல்லை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டனவா, இல்லையா என தேர்தல் ஆணையம் ஆராய முடியாது. தேர்தல் ஆணையம், உள்கட்சி விவகாரங்களில் தலையிடவும் முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் சிவில் வழக்குதான் தொடர முடியும். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story