அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்ததால் எங்கள் கிரிக்கெட் அழிந்தது - பாகிஸ்தான் மந்திரி பரபரப்பு தகவல்


அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்ததால் எங்கள் கிரிக்கெட் அழிந்தது - பாகிஸ்தான் மந்திரி பரபரப்பு  தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2021 7:36 AM GMT (Updated: 22 Sep 2021 7:36 AM GMT)

அமெரிக்கா தனது ராணுவ முகாம்களை இங்கு அமைக்க கேட்டிருந்தது, முடியவே முடியாது என்றோம் அதற்கான விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் கொடுத்து உள்ளது என பாகிஸ்தான் மந்திரி கூரினார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்தன. ஆனால்  அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததே இதற்கு காரணம் என  பாகிஸ்தான் தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் இம்ரான் கான் நேற்று தனது மந்திரி சபை கூட்டத்தை கூட்டினார் கூட்டம் முடிந்த பிறகு  தகவல் தொடர்பு மந்திரி  பவாத் சவுத்ரி நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்கா தனது ராணுவ முகாம்களை இங்கு அமைக்க கேட்டிருந்தது, முடியவே முடியாது என்றோம் அதற்கான விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் கொடுத்து உள்ளது. 

அதாவது ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெற்ற பிறகு அங்கு ஒரு கண் வைத்துக் கொள்வதற்கு பாகிஸ்தான் சிறந்த இடம் எனவே அமெரிக்க ராணுவ முகாம் இங்கு இருப்பது நல்லது என்று பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்கா கேட்டிருந்தது.

ஒரு நாடு தலைநிமிர்ந்து ஆதிக்க நாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் போது அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி வரும். பாகிஸ்தான் எந்த சவாலையும் சமாளிக்க தயாராக உள்ளது 

இரு நாடுகளும் இங்கு வந்து கிரிக்கெட் ஆட மறுப்பது பாகிஸ்தானுக்கு எதிரான உலக நாடுகளின் சதித்திட்டம். கலப்புப் போர், போலிச் செய்திகள் ஆகியவை போல் போலி மின்னஞ்சல்கள், போலி அச்சுறுத்தல்களின் காலமாக இது உள்ளது என்று கூறினார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு இந்தத் தொடர்கள் ரத்து மூலம் கோடிகணக்காக  நஷ்டம் ஏற்பட்டது என்று  சவுத்ரி ஏற்கெனவே டுவீட் செய்திருந்தார்.

Next Story