செல்வகணபதி மாநிலங்களவை எம்.பி.ஆகிறார்


செல்வகணபதி மாநிலங்களவை எம்.பி.ஆகிறார்
x
தினத்தந்தி 22 Sep 2021 7:56 PM GMT (Updated: 22 Sep 2021 7:56 PM GMT)

புதுவையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க.வேட்பாளர் செல்வகணபதி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.

புதுவையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க.வேட்பாளர் செல்வகணபதி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி தேர்வாகிறார். 
எம்.பி. தேர்தல் 
நாடாளுமன்ற மேலவையின் புதுச்சேரி எம்.பி.யாக அ.தி.மு.க.வை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம்(அக்டோபர்) 6-ந்தேதி முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ந் தேதி நடைபெற உள்ளது. 
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை சுயேச்சைகள் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மேலவை எம்.பி. பதவியை பெறுவதில் போட்டி நிலவியது. இந்த நிலையில் பா.ஜ.க. மேலிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நேரடியாக பேசியதை தொடர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட்டது. மேலவை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டது. 
செல்வகணபதி மனு தாக்கல் 
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற மேலவை எம்.பி. வேட்பாளராக பா.ஜ.க. மாநில பொருளாளர் செல்வகணபதி அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று மதியம் 1.50 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சட்டசபை வளாகத்திற்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் சட்டசபை செயலாளர் முனுசாமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர். 
போட்டியின்றி தேர்வாகிறார் 
வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. பா.ஜ.க.வை சேர்ந்த செல்வகணபதி தவிர அரசியல் கட்சியினர் வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு இன்று (வியாழக்கிழமை) பரிசீலனை செய்யப்படும். இதில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவர்களின் மனுக்களில் எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரை இல்லாததால் தள்ளுபடி ஆகிவிடும். நாளை (வெள்ளிக்கிழமை) வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும். எனவே மேல்சபை எம்.பி.யாக பா.ஜ.க.வை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி தேர்தல் துறை சார்பில் வெளியிடப்படும். இதன் மூலம் புதுச்சேரியில் முதல் முறையாக பா.ஜ.க.வை சேர்ந்தவர் மேலவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். 
வாழ்க்கை குறிப்பு 
புதிய மேலவை எம்.பி.யாக பதவியேற்க உள்ள செல்வகணபதியின் தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் திரிபுரசுந்தரி. லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த இவர், கடந்த 16.4.1957-ல் பிறந்தார். எம்.ஏ., பி.எட். பட்டதாரி. சிறந்த கல்வியாளர். விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், முதல்வரும் ஆவார். இவர் கடந்த 2017-2021 வரை புதுச்சேரி சட்டசபை நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார். தற்போது பா.ஜ.க. மாநில பொருளாளராக உள்ளார். ஆர்.எஸ்.எஸ். மீது தீவிர பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு பாலமாக இருப்பேன் 
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செல்வகணபதி நிருபர்களிடம் கூறியதாவது:- 
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேலவை எம்.பி. தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, புதுவை மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story