இறுதி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த வேட்பாளர்கள் இன்று மனுக்கள் பரிசீலனை


இறுதி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த வேட்பாளர்கள் இன்று மனுக்கள் பரிசீலனை
x
தினத்தந்தி 22 Sep 2021 10:50 PM GMT (Updated: 22 Sep 2021 10:50 PM GMT)

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இறுதிநாளில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் குவிந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி, 9-ந்தேதிகளில் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதன்மூலம் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கடந்த 6 நாட்களில்...

இந்தநிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

அந்தவகையில் கடந்த 15-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 48 ஆயிரத்து 635 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 11 ஆயிரத்து 393 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரத்து 912 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 359 வேட்புமனுக்களும் என 64 ஆயிரத்து 299 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடைசி நாளில் மும்முரம்

இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று, அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் படையெடுத்தனர். சிலர் ஆட்டம் பாட்டத்துடனும், மேளதாளம் முழங்கவும், பட்டாசு வெடித்தபடியும் என கொண்டாட்டமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் திருவிழாக்கோலம் பூண்டன. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் அணிவகுப்பு இருந்தது. அதேபோல இரவு 7 மணி தாண்டியும் பல இடங்களில் வேட்பு மனு தாக்கல் நடந்தது.

இன்று பரிசீலனை நடக்கிறது

அந்தவகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒட்டுமொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை விவரம் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை. இந்த விவரம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனு திரும்பப்பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story