மாநில செய்திகள்

நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு + "||" + Government of Tamil Nadu orders action to recover crores of rupees fraudulently by mortgaging jewelery

நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு

நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு
கூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளு படியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி நடந்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பான தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கிடையே நகை கடன்கள் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பது கூட்டுறவு துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.


261 பொட்டலங்களில் நகை இல்லை

ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பதும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்ததும் என பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் வழங்கியதற்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் ஆய்வின்போது நகை இல்லை. நகை இல்லாத இந்த பொட்டலங்களின் நகை கடன் மதிப்பு ரூ.1.98 கோடி ஆகும்.

குமரி மாவட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில், குமாரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் பலர், பல செல்போன் எண்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகை கடன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளன.

647 நகை கடன்கள் பெற்ற ஒரே நபர்

குமரி மாவட்டம் கீழ்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒரே நபர் 647 நகை கடன்கள் மூலம் ரூ.1.47 கோடி கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நபர் 5 பவுனுக்கு உட்பட்டு 625 நகை கடன்கள் மூலம் ரூ.1.25 கோடி கடன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஒரு சிலர் அவர்களுக்குரிய ஆதார் எண்ணை பயன்படுத்தி 538 நகை கடன்கள் மூலம் 5 பவுனுக்கு உட்பட்டு 3 ஆயிரத்து 508 கிராமுக்கு ரூ.74 லட்சம் கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி...

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் (அனைத்தும் 40 கிராமுக்கு உட்பட்டது) 2 ஆயிரத்து 808 கிராமுக்கு நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் நகை கடன் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் பாப்பையாபுரம் மற்றும் சுந்தரலிங்கபுரம் ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.70 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அதிரடி உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நகை அடமானம் வியாபாரம் செய்யும் ஒருவர் செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கியில் 25-க்கு மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து, தகுதியின் அடிப்படையிலான உரிய பயனாளிகளை தவிர மற்றவர்கள் பெற்ற நகை கடன்களை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சுற்றறிக்கை

இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் சார்பில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் (40 கிராம்) அளவுக்கு மேற்பட்டு நகை ஈடாக பெற்று கடன் வழங்கப்பட்டு 31-3-2021 மற்றும் 31-7-21 அன்றைய தேதியில் இருந்த நிலுவை விவரங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தபோது சில விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் நகை கடன்

* தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் (வங்கிகளில்) 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’ அடிப்படையில் மாவட்ட வாரியிலான கடன்தாரர்கள் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

* ஆதார் எண் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ஆதார் எண் அடிப்படையில் மாவட்ட வாரியிலான கடன்தாரர்கள் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடன் தொகைகளை திருப்பி வசூலிக்கவேண்டும்

* ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்ற கடன்தாரர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன்கள் பெற்ற கடன்தாரர்களின் நகை கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் நகை கடன்கள் தவணை கட்ட தவறியிருந்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகைகளை வசூலிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 2020-2021-ம் ஆண்டு காரிப் சந்தைப்பருவத்தில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. திரையரங்குகளில் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா? அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
திரையரங்குகளில் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா? அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.
3. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தப்போவது இல்லை ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு தகவல்
வார்டு ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய உள்ளதால் புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போதைக்கு தேர்தல் நடத்தப்போவது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
4. நிலப்பிரச்சினை வழக்கு - நடிகர் வடிவேலுவுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
நடிகர் வடிவேலு வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாக, நடிகர் சிங்கமுத்து கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
5. சென்னை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பணியிட மாற்றம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு
சென்னை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பணியிட மாற்றம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு.