நீட் தேர்வு பயம்: கோவையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் மாயம்..!


நீட் தேர்வு பயம்: கோவையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் மாயம்..!
x
தினத்தந்தி 23 Sep 2021 3:53 AM GMT (Updated: 23 Sep 2021 3:53 AM GMT)

கோவையில் நீட் தேர்வு பயத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாணவன் மாயமானான்.

இடிகரை, 

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள நாய்க்கன்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் மாதன். இவருடைய மனைவி அம்பிகாபதி (வயது 44). இவர்களுடைய மகன் விக்னேஷ் (19). இவன் பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்தான். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினான். ஆனால் அதில் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு 2-வது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளான். ஆனால் அந்த தேர்வில் தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் விக்னேஷ் கடந்த சில நாட்களாக அமைதியாக காணப்பட்டான்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து மாணவன் விக்னேஷ் மாயமானான். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவன் வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. 

அந்த கடிதத்தில், அம்மா-அப்பா நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க முடியாது. இந்த முறையும் நீட்தேர்வில் ஏமாற்றம்தான். உண்மையைக் கூற எனக்கு பயமாக இருந்தது. இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கும், உங்களை அம்மா, அப்பா என்று அழைப்பதற்கு எனக்கு தகுதி இல்லை. இதனால் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன். என்னை தேட வேண்டாம். இப்படிக்கு உங்கள் அன்பு மகன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த கடித்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் வீட்டில் இருந்து மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story