தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 23 Sep 2021 7:01 AM GMT (Updated: 23 Sep 2021 7:01 AM GMT)

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மெகா சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி  2-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த மெகா சிறப்பு முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 97 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 58 ஆயிரத்து 782 பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை  3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் மையங்களில் 'மெகா தடுப்பூசி' முகாம் மீண்டும் நடைபெற உள்ளது. அன்று ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் இதுவரை 9 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசி உள்ளது. மேலும் 14 லட்சம் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story