விளையாட்டு அரங்கங்களில் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி


விளையாட்டு அரங்கங்களில் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி
x
தினத்தந்தி 23 Sep 2021 9:56 PM GMT (Updated: 23 Sep 2021 9:56 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றிவிளையாட்டு அரங்கங்களில் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி.

சென்னை,

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமைச்செயலாளருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒருவரை ஒருவர் தொடாமல் விளையாடும் விளையாட்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கு விளையாட்டு பயிற்சி அகாடமிகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடாமல் விளையாடும் விளையாட்டிற்கான, திறந்த வெளியில் நடத்தும் போட்டிகளை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கான விளையாட்டு அரங்கத்திலோ அல்லது மற்ற அரங்கத்திலோ நடத்துவதற்கான அனுமதியை அளிக்கலாம் என்று அரசுக்கு பேரிடர் மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது பரிந்துரையின் அடிப்படையில், அதுபோன்ற விளையாட்டு போட்டிகளை அவர் குறிப்பிட்ட விளையாட்டு அரங்கங்களில் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது. அப்போது அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story