டாக்டர்களின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை சாவு: தாயாருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு


டாக்டர்களின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை சாவு: தாயாருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 23 Sep 2021 11:15 PM GMT (Updated: 23 Sep 2021 11:15 PM GMT)

டாக்டர்களின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை சாவு: தாயாருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சென்னை,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நமச்சிவாய செட்டி தெருவைச் சேர்ந்த எல்.மணிமேகலை என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2014-ம் ஆண்டு பிரசவத்துக்காக பழைய சஞ்சீவராயன்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு அறுவை சிகிச்சை மூலம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அப்போது, எனது குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தோம். அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்து போனது. அறுவை சிகிச்சைக்கு பின்பு குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் பாதிப்பை டாக்டர்கள் சரியாக கவனிக்காததால் எனது குழந்தை இறக்க நேரிட்டது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘அறுவை சிகிச்சைக்கு பின்பு குழந்தையை கண்காணிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதது விசாரணை அறிக்கை மூலம் தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‘ என்று உத்தரவிட்டார்.

Next Story