சினிமாவை மிஞ்சும் காட்சிகள்...! கடைசி நேர வேட்பு மனு தாக்கல்... போட்டியின்றி தேர்வாகும் இந்துமதி


சினிமாவை மிஞ்சும் காட்சிகள்...! கடைசி நேர வேட்பு மனு தாக்கல்... போட்டியின்றி தேர்வாகும் இந்துமதி
x
தினத்தந்தி 24 Sep 2021 3:09 PM GMT (Updated: 24 Sep 2021 3:09 PM GMT)

சினிமாவை மிஞ்சும் காட்சிகளுடன் கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து நாயக்கனூர் ஊராட்சிக்கு இந்துமதி போட்டியின்றி தேர்வாகிறார்.


ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்டது நாயக்கனேரி மலை கிராமம். இங்கு மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப்பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மலைவாழ் மக்கள் 2,889 வாக்காளர்கள், பொது பிரிவினர் 551 பேர் என 3,440 வாக்காளர்கள் உள்ளனர். இதுநாள் வரை நடைபெற்ற தேர்தல்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்து வந்த நிலையில் தற்போது நடைபெறும் தேர்தலில் நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், சென்னை ஐகோர்ட்டு, மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட அனைவரிடமும் தங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் பகுதியில் ஆதி திராவிடர் தற்போது வரை யாரும் இல்லாத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிஆதி திராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி, இதனை மறுபரிசீலனை செய்யக்கோரியும் மனு வழங்கி உள்ளனர்.

மேலும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி 9 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில். கடைசி நாளில் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இந்துமதி மனுதாக்கல் செய்தார்.

இவர் நாயக்கனேரி மலை கிராமத்திற்குட்பட்ட காமன் தட்டு பகுதியை சேர்ந்த மலைகிராம (எஸ்.டி.) வாலிபரான பாண்டியன் என்பவரை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்று குடியேறி உள்ளார். இந்த நிலையில் இந்துமதி நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமன் தட்டு பகுதியில் வசித்து வருவதாக வாக்காளர் அடையாள அட்டையை புதுப்பித்து வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்  நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள தேவதாஸ் என்பவரது மனைவி பியூலா (வயது 42) வேட்புமனு தாக்கல் செய்தார். மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டிருந்த கிராம மக்கள் அவரிடம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பியூலா மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கிராம மக்களிடம் தெரிவித்து விட்டு சென்றுவிட்டார்.

இதன்பின் மாலை 5 மணிக்கு மேல் நாயக்கனேரி ஊராட்சியை சேர்ந்த இந்துமதி  அவரது கணவர் பாண்டியனுடன் மனுத்தாக்கல் செய்ய வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் திடீரென ஒன்று சேர்ந்து அவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தொடர்ந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை மீறி அங்கிருந்த இந்துமதி மற்றும் அவரது கணவரை உள்ளே அனுமதித்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடையும்  என்பதால் இந்துமதியும், பாண்டியனும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வேகமாக ஓடி சென்றனர்.

ஓட முடியாத இந்துமதியை அவரது கணவர் கையை பிடித்து கொண்டு வேகமாக சென்றார். வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு ஓடி சென்று தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முன்பு இருக்கையில் அமர்ந்தனர். ஓடிவந்ததால் மூச்சு வாங்கியபடி மனுதாக்கல் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களை அங்கிருந்த அதிகாரி ஆசுவாசப்படுத்தினார்.

இந்த காட்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருந்தது. மனுத்தாக்கல் செய்த பணிகள் நிறைவடைந்து தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். கிராம மக்கள் எதிர்ப்பை மீறி மனு தாக்கல் செய்த இளம்பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த ஊராட்சியில் பியூலா, இந்துமதி ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு வேறுயாரும் மனுதாக்கல் செய்யவில்லை.  இதனை தொடர்ந்து இந்துமதி போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.




Next Story