144 நாட்களுக்கு பிறகு மீண்டும் சேவை: 1-ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பஸ்கள் இயக்கப்படும் அமைச்சர் தகவல்


144 நாட்களுக்கு பிறகு மீண்டும் சேவை: 1-ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பஸ்கள் இயக்கப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2021 8:22 PM GMT (Updated: 24 Sep 2021 8:22 PM GMT)

கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து 1-ந் தேதி முதல் குளிர்சாதன வசதி உள்ள அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படாமல் இருந்துவந்த குளிர்சாதன அரசு பஸ்கள் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி மீண்டும் இயக்குவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்பட போக்குவரத்து கழகங்கள் வாரியாக 702 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பராமரிப்பு பணிகளை செம்மையாக மேற்கொண்டு பஸ்சில் தொற்று பரவாத வண்ணம் மருந்துகள் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

நெறிமுறைகள்

பயணிகள் இந்த பஸ் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளவேண்டும். அனைத்து பஸ்களிலும் ‘சானிடைசர்’ மூலம் கைகள் சுத்தம் செய்த பிறகுதான் பயணிகள் பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகளுக்கு நடத்துனர் மூலம் ‘சானிடைசர்’ அளிக்க நடவடிக்கைகள் எடுக்க, அதிகாரிகளுக்கு தக்க நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

144 நாட்களுக்கு பிறகு குளிர்சாதன பஸ் சேவை

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு குளிர்சாதன பஸ் சேவைகள், 144 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story