சென்னையில் பரபரப்பு: கார் விபத்தால் சிக்கிய யானை தந்தங்கள், மான் கொம்பு வனத்துறையினர் விசாரணை


சென்னையில் பரபரப்பு: கார் விபத்தால் சிக்கிய யானை தந்தங்கள், மான் கொம்பு வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 24 Sep 2021 8:50 PM GMT (Updated: 24 Sep 2021 8:50 PM GMT)

சென்னையில் நடந்த கார் விபத்தில் யானை தந்தங்கள், மான் கொம்பு சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சொகுசு கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும் சொகுசு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதில் 2 ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்கள் பலத்த சேதம் அடைந்தன. விபத்துக்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்த எழும்பூரை சேர்ந்த வில்சன் (வயது 50), காரில் இருந்த லின்டா (18), நான்சி வினிஷா (19) என்பவருக்கும் மற்றும் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவிசந்திரன் (46) என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

யானை தந்தங்கள், மான் கொம்பு

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் போராடிய அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சொகுசு காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் சென்னை ஐகோர்ட்டில் பணிபுரியும் அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் என்றும், குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சொகுசு கார் மோதி, விபத்துக்குள்ளான மற்றொரு காரை போலீசார் ஆய்வு செய்த போது, அந்த காரில் சந்தேகத்துக்கிடமான பை ஒன்றில் யானை தந்தங்களும், மான் கொம்பும் இருந்துள்ளது.

வனத்துறை விசாரணை

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் இருந்த 6 யானை தந்தங்களையும், ஒரு மான் கொம்பையும் பறிமுதல் செய்து, கிண்டி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். காரில் இருந்த யானை தந்தங்கள், மான் கொம்பு கடத்திவரப்பட்டதா? அல்லது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? என்பது குறித்து கிண்டி வனத்துறையினர் கார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான காரில் இருந்து யானை தந்தங்களும், மான் கொம்பும் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story