மாநில செய்திகள்

பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஏரிகளில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு + "||" + Chief Secretary inspects Chennai lakes as a pre-monsoon precautionary measure

பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஏரிகளில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஏரிகளில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள ஏரிகளில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு அடுக்கடுக்கான உத்தரவுகளையும் அவர் பிறப்பித்தார்.
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, தலைமை செயலாளர் வெ.இறையன்பு மற்றும் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் நேற்று சென்னையில் புழல், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இதில் நீர்நிலைகளில் உள்ள கதவணைகள் மற்றும் கரைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, பருவ மழைக்கு முன்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் வெள்ள தடுப்பு தளவாடங்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். நீர்நிலைகளில் உள்ள கதவணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அதன் இயக்கம் சரியாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

பூண்டி நீர்த்தேக்க கதவணையில் ஏற்பட்ட நீர்க்கசிவை ஆய்வு செய்த தலைமை செயலாளர் வெ.இறையன்பு, ‘கதவணையில் உள்ள ரப்பர் சீல் பழுதடைந்ததால் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு குறைந்தவுடன் அனைத்து கதவணையிலும் புதிதாக ரப்பர் சீல் மாற்றிடவேண்டும். அதுவரையில் நீர்கசிவை தற்காலிகமாக நிறுத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தபோது, ‘ஏரி நீர்பிடிப்பு பகுதியில் தொழிற்சாலை கழிவு கலப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டுகுழு புலத்தணிக்கை செய்து, நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. அதன் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை பெற்றவுடன் உரிய மேல்நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

24 மணி நேரமும்...

பின்னர் அதிகாரிகளுடன் பேசுகையில், “பருவமழைக்கு முன்னதாகவே கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் இருப்பு உள்ளது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் கூடுதல் நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயத்தில் நீர்நிலைகளில் குறிப்பிட்ட கொள்ளளவை தாண்டி அதிகமாக நீரை சேமிக்கக்கூடாது. நீர்வரத்துக்கு ஏற்றவாறு உபரிநீரை படிப்படியாக வெளியேற்ற 24 மணி நேரமும் முழு கவனமுடனும், விழிப்புணர்வுடனும் தயார் நிலையில் அதிகாரிகள் இருக்க வேண்டும்” என தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகங்கை கீழடி அகழ் வைப்பக பணிகள்; அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு தளங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
2. தமிழகத்தில் 20, 21-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சில இடங்களில் 20 மற்றும் 21-ந்தேதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
3. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4. சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் சாலை பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற சாலை பராமரிப்பு பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
5. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தி.மு.க. உறுதியாக உள்ளது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.