தாம்பரத்தில் கல்லூரி மாணவியை கொன்ற என்ஜினீயர் சிறையில் அடைக்கப்பட்டார்


தாம்பரத்தில் கல்லூரி மாணவியை கொன்ற என்ஜினீயர் சிறையில் அடைக்கப்பட்டார்
x
தினத்தந்தி 24 Sep 2021 9:55 PM GMT (Updated: 24 Sep 2021 9:55 PM GMT)

தாம்பரத்தில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற என்ஜினீயர், 15 நாள் நீதிமன்ற காவலில் திருவள்ளூரில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் ரவி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுவேதா (வயது 21), நேற்று முன்தினம் மதியம் தாம்பரம் ரெயில் நிலைய வளாகத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த என்ஜினீயர் ராமச்சந்திரன் (24) என்பவரால் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். பின்னர் அதே கத்தியால் ராமச்சந்திரனும், தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

கொலையான சுவேதாவின் உடலை மீட்ட சேலையூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ராமச்சந்திரனையும் போலீசார் கைது செய்து, அதே ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உடல் ஒப்படைப்பு

நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து மாணவி சுவேதாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை பார்த்து பெற்றோரும், அவர்களது உறவினர்களும் கதறி அழுதனர்.

சுவேதாவின் கழுத்து, மார்பு மற்றும் இடுப்பு பகுதி உள்பட 6 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டதாகவும், அதில் கத்தியால் கழுத்தில் ஆழமாக குத்தியதால் மூளைக்கும், இருதயத்துக்கும் செல்லும் ரத்த குழாய் துண்டிக்கப்பட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாலும், இதனால் சுவேதா அதிர்ச்சி அடைந்ததாலும் அவர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை செய்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் காளிராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

அதே ஆஸ்பத்திரியில் ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று வந்ததால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

3 மணி நேரம் விசாரணை

ராமச்சந்திரன் உடல்நிலை நன்றாக உள்ளதால் அவரை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு போலீசார் ராமச்சந்திரனிடம் 3 மணிநேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை ராமச்சந்திரன் தான் தங்கியிருந்த அறையில் இருந்தே கொண்டு வந்ததும், சுவேதா தன்னை புறக்கணிப்பதால் அவரை கொலை செய்யும் நோக்கில் தயாராக கத்தியுடன் வந்து, திட்டமிட்டு கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

திருவள்ளூர் சிறையில் அடைப்பு

விசாரணைக்கு பிறகு ராமச்சந்திரனை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு அனுபிரியா, என்ஜினீயர் ராமச்சந்திரனை வருகிற 8-ந்தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் ராமச்சந்திரன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூரில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் நேற்று மாலை குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே மாணவி சுவேதாவின் உருவ படத்துக்கு சமூக ஆர்வலர் சந்தானம் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Next Story