‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ மு.க.ஸ்டாலின் பேச்சு


‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 Sep 2021 11:05 PM GMT (Updated: 24 Sep 2021 11:05 PM GMT)

‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ என்று மக்களை தேடி மருத்துவ மையம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில், ‘மக்களை தேடி மருத்துவ மையம்’ புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் ரத்த அழுத்த சாத்தியக்கூறு மதிப்பீடு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா மற்றும் காதுகேளாதோர் வாரத்தையொட்டி திருச்சி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றிற்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான உயர்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகள் வழங்கும் விழா ஆகியவை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று நடந்தது.

தி.மு.க. அரசின் லட்சியம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் வானுயர வள்ளுவருக்கு சிலையும் வைப்போம், லட்சக்கணக்கானவருக்கு வேலை கொடுக்க டைடல் பார்க்கும் அமைப்போம். அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கு உணவும் அளிப்போம். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதையும் மறக்காமல் வழங்குவோம். இதுதான் தி.மு.க. அரசின் லட்சியமாக இருக்கிறது.

செவிமடுக்கும் ஆட்சி

வானளாவிய வளர்ச்சி - பல்லாயிரம் கோடி திட்டங்கள் - பறக்கும் சாலைகள் ஆகியவை ஒரு பக்கம் அமைத்தாலும் - இன்னொரு பக்கத்தில் குடிசைகளை மாற்றி அடுக்குமாடி வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்ற அந்த நிலையிலும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

பெரிய விஷயங்களைப் பார்க் கும் போது சின்ன விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது என்பார் கள். அது தவறானது. ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பெரியவை மட்டுமல்ல, சின்னவையும் தெரியும். அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும்.

4 ஆயிரம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை இதுவரை 4,101 குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 327 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு 108 கோடி ரூபாய் செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மேலும் தொடருவதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகளை வாங்குவதற்கு 10 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களை தேடி செல்லும் அரசு

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள். மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள், பணம் இல்லாதவர்கள், தீராத நோயாளிகள் ஆகியோருக்கு அவர்களது கவலை போக்கும் திட்டமாக இந்த திட்டம் இருக்கிறது.

அரசை தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. இப்போது அதை மாற்றி மக்களை தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள்தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக தி.மு.க. அரசு என்றைக்கும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காது கேட்கும் கருவிகள்

விழாவில், காது கேட்கும் திறன் குறைந்த முதியோர்களுக்கு புதிய காது கேட்கும் கருவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர், காதுநுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளுக்கு முதன் முறையாக காது கேட்கும் திறனை வெளிப்படுத்தும் கருவியை அவர்களது காதில் பொருத்தி அதை ‘ஸ்விட்ச் ஆன்’ செய்தார்.

அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓராண்டு முறையான பயிற்சிக்கு பின் பேசும் திறன் பெற்ற குழந்தைகள் விழா மேடையில் திருக்குறள் ஒப்புவித்தனர். தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி சில குழந்தைகள் பாடல்கள் பாடினர். இந்த குழந்தைகளை மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story