தொடர் கொலைகள் காரணமாக போலீசார் அதிரடி வேட்டை - 450 ரவுடிகள் கைது


தொடர் கொலைகள் காரணமாக போலீசார் அதிரடி வேட்டை - 450 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 25 Sep 2021 12:07 AM GMT (Updated: 25 Sep 2021 12:07 AM GMT)

தொடர் கொலைகள் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பழிக்குப்பழி கொலைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

குறிப்பாக கூலிப்படைகள் மூலமாக தலையை துண்டித்து கொடூரமாக கொலைகள் நடந்து வருகிறது.

டி.ஜி.பி. அதிரடி உத்தரவு

திண்டுக்கல்லில் சமீபத்தில் பெண் தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு ஒரே நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடியாக ரவுடிகள் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வேட்டையில் 870 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

450 பேர் கைது

அவர்களில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 பேர் வழக்குகள் சம்பந்தமாக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். 420 ரவுடிகளிடம் நன்னடத்தைக்கான பிணை ஆணை பெறப்பட்டுள்ளது.

கைதான ரவுடிகளிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள், கத்திகள் உள்பட 250 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 70 பேர்

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சென்னையிலும் நடந்த போலீஸ் வேட்டையில் 70 ரவுடிகள் கைதானார்கள். இவர்களிடம் அரிவாள், கத்தி உள்பட 20 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் காக்காதோப்பு பாலாஜி, சி.டி.மணி உள்ளிட்ட பிரபல ரவுடிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்றும், தொடர்ந்து ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, இரும்பு கரம் கொண்டு அவர்கள் அடக்கி வைக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Next Story