தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 25 Sep 2021 2:54 AM GMT (Updated: 25 Sep 2021 4:26 AM GMT)

திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரித்திருந்தநிலையில் , வீடியோ மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்துள்ளார். 

இதுதொடர்பான வீடியோ பதிவில் பேசிய அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கு  வணக்கம். ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்வதற்காக நான் இந்த காணொலியில் இணைந்திருக்கிறேன். மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தினால்தான் நான் தற்போது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருக்கிறேன். திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 மாதமே ஆன நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. 

ஆளுநர் அறிக்கையில் 51 வாக்குறுதிகளும், எனது பதிலுரையில் 2 வாக்குறுதிகளும், நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும், அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் 64 வாக்குறுதிகளும் இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை நாட்டுமக்களுக்கு தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல், இப்படி இடம்பெற்றவர்களுக்கு கட்டணம் முழுமையாக செலுத்தவேண்டியது இல்லை. 

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப்பொருட்களின் தொகுப்பு, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பேருந்துகளில் இலவச பயணச்சலுகை, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புநிதி போன்ற தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 505 வாக்குறுதிகளில் ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களிலேயே இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 



Next Story