பதவி ஏற்ற 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்


பதவி ஏற்ற 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்
x

தி.மு.க.வின் 505 தேர்தல் வாக்குறுதியில் 202 வாக்குறுதிகள் 4 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

நெஞ்சை நிமிர்த்தி...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் காணொலி மூலம் வெளியிட்ட உரை வருமாறு:-

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள், ஏராளமான நன்மைகளை செய்வார்கள் என்று நம்பி எங்களுக்கு வாக்களித்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையை இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றுகிறோம். இதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும். தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, ‘சொன்னதை செய்வோம்- செய்வதைத்தான் சொல்வோம்’ என்று கூறினேன். ஆட்சிக்கு வந்து இன்றோடு 4 மாதங்கள்தான் கடந்துள்ளன. அதற்குள், நாங்கள் சொன்ன 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை செய்து விட்டோம்.

2.09 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியுதவி; ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு; மகளிருக்கு அரசு நகர பஸ்களில் இலவச பயணம்; மக்களின் மனுக்கள் மீது தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ துறை; தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அரசே ஏற்பு, ஆகிய ஐந்தில், முதல் 4 வாக்குறுதியும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை.

கடன் தள்ளுபடி

மேலும், வேளாண்மைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்; மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் ரூ.2,756 கோடி தள்ளுபடி; தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி; பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு; ஊரகப்பகுதிகளில் ரூ.1,200 கோடி ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்; ‘நமக்கு நாமே’ திட்டத்தை உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து செயல்படுத்துவது; ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ (5.49 லட்சம் அட்டை வழங்கப்பட்டுள்ளன); ஆலோசனை வழங்க முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அமைப்பு;

சட்டசபையில் கவர்னர் அறிக்கையில் 51 வாக்குறுதிகள்; எனது பதிலில் 2 வாக்குறுதிகள்; பட்ஜெட்டில் 43; வேளாண் பட்ஜெட்டில் 23; அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64; இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகள் உள்பட மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.

சொல்லாதவை

தேர்தல் அறிக்கையில் சொல்லாதவைகளான, அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இட ஒதுக்கீட்டு பிரிவுகளிலும், 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமையில் ஒதுக்கீடு; அவர்கள் கட்டணம் முழுமையாக செலுத்த வேண்டியது இல்லை; அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப்பொருட்கள் தொகுப்பு; திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்;

மக்களை தேடி மருத்துவம்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்; எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை, சிலை, அவர் படித்த பள்ளி புதுப்பிப்பு; தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ‘இலக்கிய மாமணி’ விருது; தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வீடு; அனைத்து சாதி அர்ச்சகர்கள், பெண் ஓதுவார் நியமனம்;

தமிழர் நாகரிகத்தின் வேர்களைத் தேடி உலகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள அறிவிப்பு; பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து சமூகநீதி உறுதிமொழி ஏற்பு ஆகியவை நாங்கள் அறிவிக்காமல் செய்தவை ஆகும். அதன்படி, சொன்னதை செய்ததோடு, சொல்லாததையும் செய்துள்ளோம். நாங்கள் சொன்ன 505 வாக்குறுதிகளில் 4 மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டிய அரசு, இந்திய துணைக்கண்டத்திலேயே தி.மு.க. அரசாகத்தான் இருக்கும். இதை ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம். இதுபோல 3 மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதை பட்டியல் போட்டு காண்பிப்பேன். உங்கள் உத்தரவின்படி உழைக்க காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story