மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 27 Sep 2021 6:09 AM GMT (Updated: 27 Sep 2021 6:09 AM GMT)

தமிழகத்தில் தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்த 12-ந் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதையடுத்து கடந்த 19-ந் தேதி நடைபெற்ற 2-வது தடுப்பூசி மெகா முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த சூழலில் தமிழகத்தில் நேற்று 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நேற்று 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 29 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசி அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட 15 லட்சம் பேர் என்ற இலக்கு மதியம் 2.15 மணிக்கே கடந்து தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரத்து 814 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. மத்திய அரசு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பினால், நான்காவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியாகும். தடுப்பூசி செலுத்துவதை திருவிழா போல தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம். மக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

Next Story