தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்? : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Sep 2021 3:31 AM GMT (Updated: 28 Sep 2021 3:31 AM GMT)

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தொடா்ச்சியாக அதிகரித்தது. நோய்த் தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தைக் கடந்தது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து படிப்படியான தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகளை அளிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து சுகாதாரத் துறை நிபுணா்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கான இறுதி முடிவை முதல்-அமைச்சர் ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பின் போது வெளியிடுவார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

மேலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது, வார இறுதி நாள்களில் கோயில்கள் மூடப்பட்டிருப்பதில் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதற்கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Next Story